புனைவு - கதை ( தமிழ் சுரபி நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதை)









போராளி
                               
                             தேவி பிரபா

           நண்பகல் வேளை ஆன படியால் வெளியே சாலையில் பரபரப்பு குறைந்திருந்தது . புகழ் பெற்ற மருத்துவமனையின்  உள்ளே பரபரப்பு அதிகரித்து கொண்டிருந்தது . வெளி
நோயாளிகள் பிரிவொன்றில் ராமுவும் , பாக்யாவும் மருத்துவரை காண்பதற்காக காத்திருந்தனர் . எப்பொழுது தங்களது முறை வரும் என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர் . இவர்களின் வரிசை எண்ணை அழைத்திருந்தனர் . உள்ளே சென்றவர் வெளியே வந்த பிறகு இவர்கள் செல்ல காத்திருந்தனர் . மருத்துவரை சந்திக்கும் முன் செய்யவேண்டிய ஆயத்தங்களை செவிலியர் ஒருவர் ஏற்கனவே முடித்து வைத்திருந்தார் .

“என்ன ஐயா , அம்மா வரலையா ?” என்று கேட்ட பழக்கப்பட்ட குரலில்  ராமு கண் கலங்க ஆரம்பித்திருந்தார் .

தழுதழுத்த குரலில் ராமு “அம்மா இருபத்தஞ்சு நாளைக்கு முந்தி காலமாயிட்டாங்க சிஸ்டர் ”  என்று பதிலளித்தார் .

“போன மாசம்  செக் அப்க்கு  உங்களோட வந்திருந்தப்போ அவங்களை பார்த்தேனே ஐயா . நல்லாயிருந்த மாதிரி
தெரிஞ்சதுங்க ஐயா ?“

“ ஆமாம்மா , இறக்கற நாள் வரைக்கும்  உடம்புக்கு சரியில்லாமல் அவ படுத்ததில்ல . எழுந்திரிக்க நேரமாச்சேனு பார்த்தேன் . தூக்கத்துலேயே உயிர் பிரிஞ்சிருக்குது ... ஹார்ட் அட்டாக்னால இறந்திருக்கலாம்  அப்படிங்கிறாரு டாக்டர். அவ இல்லாம எதுவும் ஓட மாட்டேங்குது எனக்கு . இத்தனையையும் தாண்டி என்னை தெம்பா இருக்க வச்சதே அவ தான்மா … இனி காலம் எப்படி போகுமோ தெரியலை சிஸ்டர் “ என்ற ராமு அழத்தயாராகிக்கொண்டிருந்த கண்களை முயன்று கட்டுப்படுத்தி கொண்டார் .

“அஞ்சு வருசமா அவங்களை பாத்திருக்கேன் . அவங்க தைரியம் யாருக்கும் வராதுங்க . கவலைப்படாதீங்க.. மனுசனோட பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்லை . அவங்களுக்கு பதிலா இனி கடவுள்  உங்களுக்கு துணையாயிருப்பாருங்க ஐயா ..வருத்தப்
படாதீங்க ” என்றபடியே அவர்களை மருத்துவரிடம் அனுப்பி வைத்தார் அந்த செவிலியர் .  

பாக்யா பிறக்கையில்  ராமுவுக்கு வயது 47 . குழந்தை இனி பிறக்காது என்ற நிலைக்கு ராமு-லட்சுமி இருவரும் வந்திருந்த பொழுது  பிறந்தவள் பாக்யா . ஏழு வருட வயது வித்தியாசம் கணவன் - மனைவி இருவருக்குமிடையே உண்டு.
பாக்யா அன்றைக்கும் செல்லக் குழந்தையே . இன்றைக்கும் அவள் செல்லக் குழந்தையே  .

சாப்பிட்டு கொண்டிருந்த  ராமு சிரமப்பட்டு மதிய உணவை விழுங்கிக் கொண்டிருந்தார் . பாக்யாவிற்காக மட்டுமே சாப்பிட வேண்டியதாயிருந்தது . அவர் சாப்பிட்டால் மட்டுமே அவளும் சாப்பிடுவாள் .  சகலமுமாக தோள் கொடுத்தவளின் இழப்பு எல்லா வகையிலும் அவரை பாதித்திருந்தது .

துக்கம் விசாரிக்க  லட்சுமியின் ஒன்று விட்ட சித்தப்பா பேரன் சரவணன்
ராமுவின் வீட்டிற்கு வந்திருந்தான் .அவன் வளைகுடா நாடொன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தான் .

பாக்யாவின் படைப்புகளில் ஒன்றான அழகான மயில் ஓவியம் சட்டமிடப்பட்டு வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தது . துணிமணிகள் ஆங்காங்கே  இரைந்து கிடந்தன . நாற்காலிகள் தூசியடைந்து இருந்தன . சரவணனுக்கு தான் சிறு வயதிலிருந்தே துப்புரவாக பார்த்து பழகியிருந்த வீடா இது என்று வருத்தமாகயிருந்தது .

“மாமா, பாக்யாக்கா தூங்கறாளா?” என்றான் சரவணன் .

“ஆமாப்பா ,நைட்  எனக்கு வீஸிங் வந்திருச்சு . ரொம்ப நேரம் முழிச்சிருந்தா.இன்னைக்கு செக் அப்க்கு வேற போயிட்டு வந்தோம் .அதனால  டயர்டாகிட்டா .மணி ஆறாகப் போகுதே . எழுந்திடுவா “

தூங்கி எழுந்து வந்த  பாக்யாவை கண்ட சரவணனுக்கு , மனசு தாளவில்லை . அவனிடம் பேசி விட்டு தேநீர் தயாரிக்க   சமையலறைக்கு சென்று திரும்பியவள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவள் போன்று பெருமூச்சு வாங்கியிருந்தாள் .
“ ஸ்ட்ரெயின் பண்ணாதேமா பாக்யா .நீ ஏன் டீ போட்டே...நான் வந்து போட்டிருக்கமாட்டேனா ? “என்று  கடிந்தார் ராமு . “இதெல்லாம் ஸ்ட்ரெயின் இல்லப்பா” என்றவளின் பேச்சு தெளிவில்லாமல் இருந்தது .ராமுவுக்கும்,சரவணனுக்கும் தேநீர் குவளையை இடது கையால் எடுத்து தந்தவள் , ஓய்வெடுக்க தனது அறைக்கு திரும்பி விட்டிருந்தாள் .

 மயிலை போல துள்ளிக் குதித்தோடிய பாக்யாவா இவள் என்று சரவணனின் மனம் சஞ்சலப்பட்டது .

“நீ எப்போ சரவணா சவூதிலேருந்து வந்தே? மறுபடி எப்போ போறே? “ - ராமு

“ வந்து நாலு நாளாச்சு மாமா . இனி இங்கே தான் இருக்கப்போறேன் . நாலு வருசமாக  அங்கே இருந்தாச்சு . இனி இங்கே தொழில் ஏதும் பார்த்திட்டு இருக்கப் போறேன் மாமா “

எந்த உதவியென்றாலும் , தயங்காமல் தன்னை அழைக்குமாறு  ராமுவிடமும்,பாக்யாவிடமும் சொல்லி விட்டு விடை பெற்றிருந்தான்  சரவணன் .

சரவணனுக்கு பாக்யாவை பற்றிய நினைவுகள் மனத்திரையில் வரிசையாக வர ஆரம்பித்திருந்தன . பாக்யா பட்ட படிப்பை முடித்து விட்டு ,வேலைக்காக காத்திருந்த நேரமது . அவளின்  அழகை கண்டு விரும்பி மணம் புரிய கேட்டவன் ராஜேஷ் .

திருமணமாகி  நான்கு வருடங்கள்  குழந்தையின்றி இருந்தனர் பாக்யா தம்பதியர் .  லட்சுமியை போல பாக்யாவும் காலங்கடந்து பிள்ளை பெறுவாள் என்று உறவுகள் புறம் பேசியதை கண்டு மனம் தளராதது லட்சுமி மட்டுமே . மகளுக்கும் ,கணவனுக்கும்  மன திடத்தை ஊட்டியவர் அவரே .

இருபத்து ஐந்து வயது வரை  பாக்யாவிற்குள் ஒளிந்தேயிருந்த ரூமாட்டிக் வகை இருதய வால்வு பிரச்சனை , மூச்சுத்திணறலோடு தன்னை காண்பித்துக்கொண்டிருந்தது . பாக்யாவின் கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு நான்காம் மாதம் ஆகியிருந்த பொழுது இந்தப் பிரச்சனை வந்திருந்தது. அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் வீட்டிற்கு வந்தால்,கீழே விடாமல் தூக்கிக் கொஞ்சி கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பவள் பாக்யா . ஒரு குழந்தையை  பெற்றெடுக்க தன்னுடைய உடலே தடை செய்கிறதே என்று மனதளவில் உடைந்து போயிருந்தாள். எப்படியாவது குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவா அவளை உந்திக்
கொண்டிருந்தது .

குழந்தையை விட அவளது  உடல்நலத்தை பேணவேண்டும்  என அறிவுரை சொன்ன மருத்துவர்கள் , கணவன்  மற்றும் பெற்றவர்களை அவள் பெரிது படுத்தவில்லை . மிகுந்த உடல் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பெற்றெடுத்திருந்தாள் .

முப்பது வயதை தொடும் பாக்யாவிற்கு ,இரண்டு முறை பக்கவாதம் வந்து போயிருந்தது . குழந்தைக்கு ஒரு வயதாகையில் , முதல் முறையாக பக்கவாதம் வந்திருந்தது. இருதய
வால்வு பிரச்சனையால் மூளையின் ஒரு பகுதி  பாதிக்கப்பட்டு,வலது புற கை,கால் பாதிக்கப்பட்டிருந்தது . அந்த முறை மருத்துவமனையிலிருந்து வீடு  திரும்பிய பொழுது தான் தனது கணவனையும், மகளையும் கடைசியாக பார்த்தது .தாயை மிரள மிரள பார்த்த மகள் தந்தையுடன போய்  ஒட்டிக்கொண்டாள் .

இருபத்தொன்பது வயதாகையில்  ஏற்பட்ட பக்கவாத பாதிப்பு சற்று அதிகமாயிருந்தது . வலது பக்க செயலிழப்புடன் ,பேச்சும்  பாதிக்கப்பட்டிருந்ததாக ராமு மாமா சொல்லியிருந்தார் .

பாக்யாவின் பேச்சும்,நடையும் பயிற்சிகளுக்கு பிறகு  எவ்வளவோஹ முன்னேறியிருப்பதாக மாமாவும் , அவன் அம்மாவும்  சொல்லிக்கொண்டனர் .

பாக்யாவிற்காகவும்,ராமு மாமாவிற்காகவும் என்ன செய்யலாம்
என்ற யோசனையே சரவணனுள் பிரதானமாயிருந்தது .நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாக்யாவையும்,ராமுவையும் பார்த்து வந்தான் சரவணன் .

காலை எட்டு  மணியிருக்கும் . பாக்யாவிடமிருந்து அலை பேசி அழைப்பு வந்திருந்தது . இந்தியா வந்திருந்த மூன்று மாத காலத்தில் அது தான் அவளின் முதல் அழைப்பு என்பதால் உள்ளுணர்வு எதையோ உணர்த்தியது .

ராமு மாமாவை கீழே கிடத்தியிருந்தார்கள். அழுது கொண்டிருந்த  பாக்யாவை சுற்றிலும் அண்டை வீட்டார் அமர்ந்திருந்தனர் .

பாக்யாவின் கணவன் வீட்டுக்காரர்களுக்கு சரவணன் தகவல் அனுப்பியிருந்ததால், வந்திருந்தனர் .வந்தவர்கள் லட்சுமி இறந்ததற்கு தகவல் சொல்லாததை  பெரும் பிரச்சனையாக்கியிருந்தனர் .

ஐந்து வயது குழந்தை பாக்யாவை  அப்படியே உரித்து வைத்திருந்தது . ஆசை தீர முத்தம் கொடுத்தவள் குழந்தையை  தகப்பனிடம் அனுப்பி வைத்துவிட்டாள் .உறவினர்கள் பாக்யாவின் நிலையை எண்ணி அவளது கணவன் வீட்டாரிடம் பேசிக்கொண்டிருந்தனர் . இந்த வாக்குவாதங்களை பாக்யா ரசிக்கவில்லை . பாக்யாவின் மறுப்பை  எவரும் சட்டை செய்யவில்லை . கணவன் வீட்டார் அவளின் உறவினர்கள் சொல்வதை ஏற்று , அவளை அழைத்து செல்ல முன் வந்த பொழுதும் பாக்யா அவர்களுடன் செல்ல மறுத்து விட்டிருந்தாள் .

பாக்யாவின் செய்கையால் எரிச்சலுற்ற உறவினர்கள் காரியம் முடியும் வரை சலசலத்து கொண்டிருந்தனர் . எல்லாம் முடிந்தவுடன் அமைதியாக செல்லும் படி ஆகிற்று .

சரவணனும் , அவனின் அம்மாவும் தங்களுடன் வரும்படி அழைப்பு விடுத்த போது பாக்யா  தீர்மானமாக பேசினாள் . அதுவரை அவள் அமைதி காத்ததற்கான பதிலை மொத்தமாக பேசினாள் .இடையிடையே ஓய்வு எடுத்துக்கொண்டு .

“ அத்தை ...ஒரு அம்மாவா என்னால அவளை பராமரிக்க முடியலை . அவளுக்கு அப்படி செஞ்சு அழகு பார்க்கணும் …. இப்படி செஞ்சு அழகு பார்க்கணும் ...இப்படி எவ்வளவோ ஆசைப்பட்டேன் . ஆனா, என் மகளை பராமரிக்க அளவுக்கு   இப்போ எனக்கு உடல் வலு இல்லை . எங்கம்மா, அப்பா ஆரம்பத்துலேயே என் பொண்ணை எங்கக்கூடவே வச்சுக்க பிரியப்பட்டாங்க . நானும்,அப்பாவும் ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சிட்டிருந்தோம் . அம்மா எங்களோட அலைஞ்சாங்க . பாப்பாவை யாரு பார்க்க முடியும் ?. நாங்கெல்லாம் விருப்பப்பட்டாலும் ஒண்ணும் செய்யமுடியாம அவளை அவ அப்பாகிட்டே விட்டிருந்தோம் .கொஞ்சம் உடம்பு தேறினதுக்கு பிறகும் அவங்ககிட்ட குழந்தையை கேட்டா தரவே இல்லை . கேட்டதுக்கு  அவங்க சைடுல இருந்து லா பாயிண்ட்ஸ் பல பேசி பாப்பாவை அவங்களோட வச்சுக்கிட்டாங்க . எனக்கு எவ்வளவோ வேதனையிருந்தாலும்,அவ நல்லாயிருக்கணும் . அது தான் எனக்கு வேணும்”

“அக்கா,நீ நம்ம வீட்டுக்கு வாக்கா . நானும்,அம்மாவும் பாத்துக்கறோம்க்கா”-சரவணன் .

“இல்ல சரவணா அது சரி வராது . உனக்கு கல்யாணம் ஆகணும் . நான் கூடவே இருந்தா எல்லோருக்கும் கஷ்டம் . நான்
ஏற்கனவே யோசிச்சு வைச்சுட்டேன் . எங்க அம்மா,அப்பா காலத்துக்கு பிறகு ஏதாவதொரு ஹோம்ல  இருந்துக்கணும் . வீட்டை வித்துட்டு அதிலிருந்து வர்ற பணத்தை டெபாசிட் பண்ணிடணும் .வட்டியை  வச்சு மாச செலவுகளை பார்த்துக்கணும். மருந்து செலவுகளை பார்த்துக்கணும் . என் காலத்துக்கு பிறகு என் பாப்பாக்கு எல்லாமும் போய் சேரட்டும் ”.

“ ஏன் இப்படி யோசிச்சிருக்கே பாக்கி? நாங்க இருக்கிறோம்டா உனக்கு . நீ பிரியப்பட்டா உன் ஹஸ்பென்ட் கிட்டே பேசுறோம்டா . நீ எங்கக்கூட இரேன்”- சரவணனின் அம்மா தனம் .

“அத்தை என்னை விரும்பி கட்டினவரு அவரு.ரொம்ப அன்பும் வச்சிருந்தார்் . உடம்புக்கு முடியாம போக போக அவருக்கு பிரியம் குறைஞ்சு விரக்தியும்,வெறுப்பும் வந்திருச்சு . ஹாஸ்பிட்டலுக்கும்,வீட்டுக்குமா நான், அடிக்கடி போய் வந்ததால குழந்தையை அவங்க என்கிட்ட காண்பிக்கிறது கூட குறைஞ்சு போச்சு . குழந்தையை பார்க்க முடியாம போன
விரக்தில மாத்திரைகளை  நிறுத்தினதால் பக்கவாதம் வந்திருச்சு . சர்ஜரி செய்யலம்னு ப்ளான் செஞ்சப்போ தான்  இப்படி ஆகிடுச்சு . அப்புறம் ஒண்ணொண்ணா வந்து போயிருச்சு . எனக்கு இந்த வியாதி வந்த நாளிலிருந்து போராட்டமே வாழ்க்கையாயிருச்சு .ஆரம்பத்துல பழைய வாழ்க்கையை  நினைச்சு பல முறை அழுதிருக்கேன் . எதையும் மாத்தற வலு எனக்கு இல்லை .இந்த உண்மை தெரிய ஆரம்பிக்கிறப்போ எல்லாத்தையும் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டேன் . என் வீட்டுக்காரரோடு வாழ்வேன்ங்கிற நினைப்பை முதல் தடவை பக்கவாதம் வந்தப்போவே நிறுத்திட்டேன் . எங்கம்மா உயிரோட இருந்தவரை என் கண் கலங்கினால் போதும் ….தேத்த ஆரம்பிச்சுடுவாங்க . அவங்க தான் எனக்கு தெம்பை தந்தது . முதல் தடவை பக்கவாதம் வந்தப்போ தான் நான் கடைசியா அழுதது . அதுக்கு பிறகு நான் அழுததே இல்லை . அப்பா எனக்கு நோய் வந்ததில்லயிருந்தே உடைஞ்சிட்டார் . அம்மா இல்லாம போன பிறகு இன்னும் நொறுங்கிட்டார் . எனக்காக தேறி வரமாட்டார்ங்கிற நிதர்சனம் புரிய ஆரம்பிச்சிருச்சு . அம்மா இறந்த இந்த மூணு மாசத்துல இன்னும் என்னை வலுவாக்கிட்டேன் .”

“நாம எல்லாருமே போராளிகள் தான் சரவணா . நான் கடும் போராளி . எனக்கான போராட்டம் உடம்போடு தான் . மனசோட நடந்த போராட்டத்தை எப்பவோ  நிறுத்திட்டேன் . என்னோட போராட்டம் அதுவா நிற்கிறவரை என்னால முடிஞ்சதை செய்ய போறேன் . இடது கையால வரைய ஆரம்பிச்சுட்டேன் .தஞ்சாவூர் பெயிண்டிங் கத்துக்கணும் .கம்யூட்டர்ல டிசைனிங் செய்யறேன்  அத்தை “

“ பாக்யா அவருக்கு இப்படியொரு தொந்தரவு வந்திருந்தா ..நீ இப்படித்தான் நடந்திருப்பியா?”

“அதை பத்தி பேசி என்னாகப்போகுது சரவணா?”

“நீ விரக்தில பேசறேம்மா . நாங்க எப்போதும் உனக்கு துணையாயிருப்போம் மா” - தனம் .

“ விரக்தி இல்லத்தே . யதார்த்தத்தை யோசிச்சா இது தான் எல்லாத்துக்கும் நல்லது அத்தை . எனக்கு உங்கக்கூட இருக்க தோணினா கண்டிப்பா உங்களோட இருப்பேன் அத்தை”

கணவனின் வாழ்க்கையில் தான் இனியும் இடையூறாக இருக்கக்
கூடாதென்று விடுதலைப்பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டிருந்தாள்  பாக்யா . தாய் தந்தை உயிரோடு இருந்த பொழுது அவள் வீட்டிற்கு தபாலில் வந்த அந்த  விடுதலைப்பத்திரத்திற்கு விடுதலை அளித்து விட்டிருந்தாள் பாக்யா.


http://www.tamilsurabi.in/threads/winners-of-tamilsurabis-story-contest-2017.5162/#post-18416
(http://www.tamilsurabi.in/threads/winners-of-tamilsurabis-story-contest-2017.5162/#post-18416)
-----------------------------------------------------------



 










கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"புதிர் விளையாட்டு" மின்னூல் வெளியீடு

கட்டுரை - மனநலம்