புனைவு - கதை - அகல் மின்னிதழில் பரிசு பெற்ற கதை

                            பெருவிரல்
           
         

                    தேவி பிரபா
  
இடது கையால் , அருகேயிருந்த கம்பியை இறுகப் பற்றியிருந்தவளை , நடத்துனர் இடித்துக் கொண்டு சென்றிருந்தார் . யாரோ அவள் காலைச் சுரண்டுவது போலிருந்தது .

' மத்தியானம் எடுக்கற பத்துநிமிச ரெஸ்ட்டும் இவங்களால கெட்டுப்போச்சு ... முதலாளி லீவ் தர மாட்டேங்கிறாருனு ,  ஒத்த பொய்யை சொல்லியிருக்கலாமோ?’  என்றெண்ணியவளின் , முகத்தில் விழுந்த வெயில் எரிச்சலை அதிகமாக்கியிருந்தது .  

'  இவங்களால எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு ! ‘ என்று யோசித்தவள் ,
பெருமூச்சொன்றை வெளியிட்டிருந்தாள் .  அவளது வலது கை பெருவிரலையும் , முகத்தையும் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தாள் பக்கத்தில் நின்றிருந்த சிறுமி .


" வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது ...  குளு குளு தென்றல் காற்றும் வீசுது "  என்ற பாடல்  ஓடிக் கொண்டிருந்தது .

அவளது அலைப் பேசி அழைத்திருந்தது . யாரென்று பார்த்தவளின் வலது கை பெருவிரல்  நன்கு ஊறிப்போயிருந்தது . இப்போது வலது கையால் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தாள் .

மூன்றாவது முறை , சுரண்டிய கால் பெருவிரலின் தோல் உறிந்து ரத்தம் கசிந்திருந்தது .  "காலை ஒழுங்கா உங்க இடத்துல வச்சுக்கோங்க .  வயசானவரா இருக்கிறதாலே இதோட விட்டேன் ... பார்த்து நடங்க ! " என்றவளை கடந்து போன நடத்துனர் இடிக்காமல் சென்றிருந்தார் .

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவள் மெதுவாக நடந்து , வீட்டுக்குள் அப்பொழுது தான் நுழைந்திருந்தாள் .


" இதோ அவளே வந்துட்டாளே " என்றபடியே வாசலுக்கு வந்த அவளது மாமா , " பொறுமையா பேசு " என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக .
கூடத்தில்  வயதான பெண்மணி ஒருவர் காலை நீட்டி உட்கார்ந்திருந்தார் . நடுத்தர வயது ஆணும் , பெண்ணும் அவரோடு சேர்ந்து  வெற்றிலையை மென்று கொண்டிருந்தனர் . 

" எல்லாரும் வாங்க . வாங்க அத்தை ...  நல்லாருக்கீங்களா ? . மாமா வரலையா ?" என்று நலம் விசாரித்தவளிடம் ,

" உன்னைப் பாத்திட்டு போறதா இருந்தார் . அவசர வேலை வந்ததால கொஞ்சம் முன்னாடி தான் கிளம்பினாரு " என்றார் வயதான பெண்மணி .
காபி கலந்து கொண்டிருந்த  அவளது உள்ளக்கொதிப்பிற்கு முன் , சமையலறையின் வெம்மை தோற்றுக் கொண்டிருந்தது .

"  எடுத்துக்கோங்க … எடுத்துக்கோங்க …  அத்தை குடிங்க " என்று உபசாரம் செய்தவளிடம் ,

நடுத்தர வயது  ஆண் , " மங்கை …  எப்போ நம்ம  வீட்டுக்கு வர்றே ? “ என்றார் .
சுடிதார் துப்பட்டாவை திருகிக் கொண்டிருந்தவளிடம் , " கேட்கிறார் இல்ல ... அவருக்குப் பதில் சொல்லுமா " என்றாள் அந்த முதியவள் .

' அந்த மனுசனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்னு நல்லாத் தெரியுமே ! இப்போ உங்க முன்னாடிக் கேட்டா , நான் பயந்து போயிருவேனா ?.  நான் வாயைத் தொறந்து பேசினாலும் , ஏற்கனவே சொன்ன  பதில் தான் வரும் '

" நான் இப்போ வரல ... " என்றாள் அவள் .

“ இங்க இவ்வளவு நாள் இருந்தாச்சு ... இனிமேலாவது அங்கே வந்து இரு ! “ என்ற நபரிடம் , தலையசைப்பின் மூலமாக மறுப்பைத் தெரிவித்திருந்தாள் .

“ நாங்க சொல்றதை கொஞ்சம் கேளும்மா.  என்னைக்கோ நடந்ததை இன்னைக்கும் பிடிச்சுத் தொங்கிட்டு இருந்தா நல்லாயிருக்குமா ?  “ என்று ஆரம்பித்த நடுத்தர வயது பெண்மணியைப் பார்த்து  ஒரு முறைப்பை வீசியிருந்தாள் அவள்  . பின்  தலை குனிந்தபடியே , தரையில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் அவள்  

“ இங்கே பாரு பாப்பா . அவங்க 
சொல்ற படி கொஞ்சம் கேளும்மா " என்றார் அந்த வயதான பெண் .

நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தவள்  , " முடியாது அத்தை  ... என்னை மன்னிச்சுக்கோங்க ... “ என்றாள் உறுதியாக .
அவளது மாமாவிடம் ,

"  முடிவா அவளை எப்போ அனுப்பி வைக்கப் போறீங்கடா ?" என்றார் அவர் .

அவளது மாமா , " மாமா ... நீங்க மூணு பேரும் பேசி முடிவெடுங்க ... கழுத்தைப் பிடிச்சு நாங்க தள்ள முடியுமா ?" என்றார் .

" உனக்குப் பேச சொல்லித்தரணுமாடா ?” என்றவரின்  ஆத்திரம் அதிகமாகிக் கொண்டிருந்தது .

மீசையை முறுக்கிய படியே ,

" நீங்க யாரும் அவளைக் கண்டிக்க மாட்டீங்களா ? .அவளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க .  பெத்தவங்க எங்களுக்கு இல்லாத உரிமையா உங்களுக்கு ?. அவ தான் சின்னப் பொண்ணு . அவளுக்குப்புத்தி சொல்லி அனுப்பி வைக்காம , பெரியவங்களும் அவ கூடச்சேர்ந்து ஆடுறீங்க " 

கத்திக் கொண்டிருந்த அவள் தந்தையிடம், பதில் பேச வேண்டாமென்று சைகைச் செய்த மாமாவை அவள் கண்டு கொள்ளவில்லை  .

மங்கை , அவள் அப்பாவிற்கு எதிரே நின்று கையை நீட்டி , 

“ முப்பது நாள் பிள்ளையாயிருந்த  என்னை  ,சோசியக்காரன் சொன்னதாலே இங்கே கொண்டு வந்து விட்டீங்களே ... உங்க சம்சாரத்துக்குப் பெரியவங்க பலரும் புத்திமதி சொன்னாங்களே … அதை அவங்க கேட்டாங்களா ? நீங்க கேட்டீங்களா ? ”

அந்த வருங்கால மாமியார்  அவளது கையைப் பற்றி மேலே பேச வேண்டாமென்றார் . 

" அத்தை , சின்ன வயசிலிருந்தே நாங்க ஒண்ணா இருந்ததில்லை ... “

“ முடிஞ்சதை பேசி பிரயோசனமில்லமா . இனி நடக்கறதை பத்தி பேசுவோம் “

“ அத்தை , ஒண்ணாயிருந்தா எல்லாருக்குமே பிரச்சனை தான்  "

அவளது அத்தை பதில் பேசும் முன்பு ,

" உன்னைக் கட்டிக்கொடுக்கப் போற இடத்திலயும் நாங்க அவமானப்படணும் ... ஊரே எங்களைப் பார்த்து காறித் துப்பணும் ... அதுதானே  உன் ஆசை ? ...
ஊரு உலகத்துல இல்லாததையா நாங்க செஞ்சோம் ? , உன்னைப் பெத்தவச் சொல்றேன் . இவ்வளவு பிடிவாதம் ஒரு பொம்பளைக்கு ஆகாதுடி .என் நிலைமைல யாரு நின்னாலும் அப்பிடி தான் செஞ்சிருப்பாங்க .  நாங்க  ஆசைப்பட்டா அதைச் செஞ்சோம் ?. பக்கத்துல  பிள்ளை அழுதுச்சுன்னா , என் பிள்ளை என்ன செய்யறாளோங்கிற , என் தவிப்பு அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும் …  ஆஸ்பத்திரில இந்த மனுசனை சேர்த்துட்டு ,  நான் பட்ட பாடு கூட இருந்து பாத்தவங்களுக்குத் தான் தெரியும் . எத்தனையோ தடவை உன் கிட்ட இதைப் பத்தி பேசிட்டேன் . உன் கால்ல விழாதக் குறையா நான் கெஞ்சிக் கேட்டுட்டேன் . “ பெத்த மனசு பித்து .பிள்ளை மனசு கல்லும்பாங்க “ என்று மூக்கை உறிஞ்சிய தாயைப் பார்த்தவளின் , மூக்கு விடைக்க ஆரம்பித்திருந்தது .

“   அஞ்சு வயசு வரை எனக்கு அப்பா , அம்மான்னா  தாத்தா, பாட்டி தான் . ஸ்கூல்ல பிள்ளைங்க கேலி பண்ணித்தான் அப்படிக் கூப்பிடுறதை நிறுத்தினேன் . அதுக்குப் பிறகு யாரையுமே நான் அப்பிடிக் கூப்பிட்டது இல்லை . உங்களுக்குப் பயம் . எங்கே நான் வந்தா ஏதாவது நடந்துடுமோங்கிற பயம் ... இப்போ ஊர் ஏதும் பேசிடக்கூடாது . அதான் கூப்பிடுறீங்க " என்றாள் அவள் .

அவளது தாயார் வாயைப் பொத்திக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார் .

" கண்ணே கண்ணுறங்கு ... கான மயிலுறங்கு ... பொன்னே நீயுறங்கு ..." பக்கத்து வீட்டிலிருந்து வந்த தாலாட்டுச்சத்தம் மட்டுமே கூடத்தில் கேட்டுக்கொண்டிருந்தது .

அனலை வெளியேற்றிக்கொண்டிருந்த 
சமையலறைக்குள் போனவள் , வலது கை பெருவிரலை வாய்க்குள் வைத்திருந்தாள் . சற்று ஆறுதலை உணர்ந்திருந்தாள் .

(https://agalmagazine.weebly.com/2950299729793007-299030062980-29703009298029843021298030072992-298030072985-2970300729932986302129863007298029963021)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"புதிர் விளையாட்டு" மின்னூல் வெளியீடு

கட்டுரை - மனநலம்